&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Sunday 31 July 2011

உயிரற்ற மரமாய் நான்

என் மனச்சிப்பிக்குள்
கண்ணீர் முத்துக்களை
அறிமுகம் செய்தவனே..

அன்று என் மனமேடையில்
அழைப்புக்கள் எதுவுமின்றியே
உன் காதலை அழகாய்
அரங்கேற்றிச்சென்றுவிட்டு...

இன்று என் மனக்கிளையிலிருந்து
விவாகரத்துப்பெற்ற இலையாய் -நீ
நானோ உயிர்ப்பை தொலைத்த
உயிரற்ற மரமாய் உன் எதிரில்....(தனா)

என் மனம் திருடிய திருடன்

என் வாழ்க்கைப் பயணத்தின் நாட்களை
நான் கடந்து சென்று கொண்டிருந்தவேளை
யாரோ எனைக் கைதட்டி அழைக்கும் ஓசைகேட்டு
திரும்பிப் பார்த்தேன் அவன் - சிலைபோல்
நின்றபடி சிரித்துக்கொண்டே கேட்டான்
உனக்கு துணையாய் நான் வரவா என - நானோ
தனியாய் பயணிக்கவே விரும்புகிறேன் என கூறி
தடம் பதிக்க தொடங்கிய போது தான்
என் கால்களின் தடுமாற்றம் கண்டு நான்
புரிந்துகொண்டேன் அவன் வழிப்போக்கன் அல்ல
என் மனம் திருடிய வழிப்பறித்திருடன் என்று...(தனா)

எப்படி வலி சொல்வேன்

அன்பே !
என் இதயம் ஓய்வு தேடி இடைவேளை விட்டு
துடித்த போதும் என் உள்ளம் ஒரு நொடிகூட
உன் நினைவை சுமக்க மறுத்ததில்லையே
என் மெளனங்கள் கண்டு என் அன்பை
நீ மரக்க வைத்துச் சென்றவேளை
என் வார்த்தைகளின் மரணஒலியை
நீ ஒரு நொடிகூட உணரவில்லையா?- அன்று
தென்றலாய் நீ என்னை வருடிச்சொல்கையில்
மெளனமாய் நானும் தலை சாய்த்தேன் -இன்று
முட்களால் என்மனதை நீ கீறிச்செல்கையில்
வார்த்தைகளால் எப்படி வலி சொல்வேன்?....(தனா)

உண்மை உறவு

நான் வேகமாக நடக்கையில்
என் கால்களுடன் கொஞ்சிக்குலவும்
கொலுசொலிபோல் அவன் குரலோசை
நான் கோபத்துடன் பேசுகையில் என்மனதை
இதமான வார்த்தைகளால் வருடிக்கொள்வான்
இருந்தும் அவன் கலகக்காரன் தான்
வண்டிக்கு அச்சாணிபோல் வாழ்க்கைக்கு
நம்பிக்கை வேணும் நம்பகமானவனாக இரு என்றேன்
அவனோ என்னிடம் உனக்குப் பிடித்தவைகள்
எனக்குப்பிடிக்காது என்றான் நானோ அவனிடம்
உன்னைப்பிடிக்கும் உனக்கு எப்படி என் கேட்டு
அவனை ஊமையாக்கி உணரவைத்தேன்
உறவுகளுக்குள் உண்மை இருக்கும் வரை
அவை ஊனமாவதில்லை என்பதை........(தனா)

காட்சி ஒன்று தந்துவிடு

கண்களுக்கு களவு செய்து - தினம்
கனவில் மட்டும் அருகில் வந்து
கண்சிமிட்டி கரம் பிடித்து -உன்
கைகளுக்குள் சிறைபிடித்து - என்
காதோடு நீ சொல்லும் வார்த்தைகளை
தினம் கவிவடிக்கும் இந்த
காரிகையின் கண்களுக்கு
காட்சி ஒன்று தந்துவிடு -என்
மனதிற்குள் கருவான உன்நினைவுகள்
முழு உருவமாக உறைவதற்கு.....(தனா).

இதயத்தின் பரிசு



பூத்துக்குலுங்கிய ரோஜாத்தோட்டத்தில்

பூப்பறிக்கப்பட்ட செடியாய் அவள் மனது
நீயோ உன் அன்பு மலர்களால் அவள் மனதை
அலங்கரிக்க துடிக்கிறாய் -ஆனால் அவளோ
முள்ளை மட்டும் சுமக்கும் தன் மனது
உன் அன்பு மலர்களைக் காயப்படுத்திவிடுமோ
என் பயந்து தன்னை கருக்கிவிடு என
கதிரவனிடம் வேண்டி கடுந்தவம் புரிகிறாள்
வலிகளுடன் வாழும் இதயத்தால்
வாழ்த்துக்களை மட்டும் தான் பரிசளிக்க
முடியும்..... வலிகளையல்ல........(தனா)

உன் குரலோசை

காற்றலையில் வந்த உன்குரல் கேட்டு நான்
கண்ணுறக்கம் தொலைத்து விட்டேன்
நேற்று வரை குயிலோசை ரசித்த மனதுக்கு
இன்றுமுதல் உன்குரலே இசையாகிவிட்டதுவே
காற்று கூட அறிந்திடாத உன்குரல் மாற்றத்தை
என் மனம் கணநொடியில் புரிந்து கொண்டதுவே
தோற்றங்கள் தொலைவில் இருந்தாலும் குரல்
மாற்றங்களை மனது அறிந்து கொள்ளுமே
அழைப்பது எதுவோ நீயாகிலும் என்னை
அடைவது உந்தன் குரலோசை தானே
உதடுகள் போலி வார்த்தையை உச்சரித்தாலும் என்
உள்ளத்தில் உறைவது உன் உண்மை மட்டுமே...(தனா)

Sunday 17 July 2011

உன் யாசகியாக நான்

என்னவனே !
உன் மனம் என்னும்
அட்சய பாத்திரத்தை நம்பி
உன் அன்பை தினமும்
யாசிக்கும் யாசகியாய் நான்...
நீயோ வலிகளை மட்டும்
அள்ளிக்கொடுக்கின்றாய்
வரையறை என்பதே இல்லாமல்- இருந்தும்
வேண்டாம் என்ற சொல்லை என் மனம்
உதிர்க்க மறுக்கிறது ஏனெனில்
என்றாவது ஒருநாள் அந்த வலிகளுடன்
உன் சிறு அன்பையும் யாசிக்கக் கூடும்
என்ற பேராசையில் இன்றும்
உன் அன்பின் யாசகியாய் நான்.......(தனா)

வெட்கத்துளிகள்

வர்ணங்கள் பல கொண்டு வட்டமிடும்
வண்ணத்துப்பூச்சி போல் என் மனமும்
எண்ணங்கள் பல கொண்டு
இறக்கை விரித்துப் பறக்கின்றது
தரையில் நடக்க மறுக்கும் கால்கள்
தாள லயத்துடன் தளிர்நடை போடுகின்றது
இதுவரை எனைப்பற்றி உன் விரல்கள் எழுதிய
கவிவரிகள் போதாதென்று நாளை
உன் விழிகள்எழுதப்போகின்றன என
நீ கூறியதை நினைத்து
என் விழிகள் இன்றே
சேமிக்கத்தொடங்கிவிட்டன
உன் விழிகளுக்கான பரிசுக்குவியலாக
தன் வெட்கத்துளிகளை.......(தனா)

உலாவரும் உன்நினைவு

என் உள்ளத்தின் உவகைகளை
உனதாக்கிக் கொண்டவனே
உன் வரவை எண்ணி மனம்
உறக்கத்தை உதறிவிட்டு
உற்சாக உல்லாசத்தில்
உலாவருகின்றது உன் நினைவோடு

எப்போது வருவாயென
எதிர்பார்த்திருந்த என் விழிகள்
இன்றே என நீ கூறியதைக்கேட்டு
இமைக்க மறுப்பதைக்கண்டு
இதழ்கள் பரிகாசத்துடன் புன்னகையை
இறைத்துக்கொண்டிருக்கின்றன....(தனா)

அவனின் அழைப்பு

நான் விண்ணப்பிக்காத போதிலும்
உத்தியோக பூர்வ அழைப்பு
அவன் இதயவறையிலிருந்து
இருளான என் மனதை
ஒளியேற்ற வா என்று...
எனக்கு அறிமுகமில்லாத அவனின் முகமும்
ஒரு நொடிகூட என்மேல் படியாத பார்வையும்
எனக்காக காத்திருக்கின்றன....நானோ
விண்ணப்பிக்காத போது அழைப்பா? என
சிந்தித்தபடி என் விரல் கொண்டு
அந்த விலாசத்தை தடவிப் பார்க்கையில்
என் மனதின் ஏதோ ஓர் மூலையில்
உருவாகிய விறைப்பபை உணர்ந்துகொண்டேன்
இருந்தும் அவ் அழைப்பிற்கு என் பதிலாக
அதன் முகவரி தவறு என்று பொய் கூறி
அப் பொய்க்குள் என் முகம்
மறைத்துக் கொள்கின்றேன்.......(தனா)

புதிய தோற்றங்கள்

அன்பே !
நீயாகவே என்னை தேடிவந்து
உன் நினைவுகளை எனக்குள்
முழுதாய் பரிசளித்தாய்
வாழ்த்துக்கூறிய உன் வார்த்தைகளை
வரமாக நானும் ஏற்றுக்கொண்டு
வாழத்தொடங்கினேன் உன் நினைவில்
மாற்றங்கள் வேண்டுமென நீ கேட்க
மெளனமாய் நானும் தலைசாய்த்தேன்
தோற்றங்கள் புதிதாய் தோன்றிடவே
தொலைத்துவிட்டாய் என் நினைவை
உன் மனதை விட்டு.............(தனா)

வலிகளை சுமந்த மனது

பிரிவே !
உயிரைக்கேட்டிருந்தால் தந்திருப்பேன்
மாறாக நீ எந்தன் உணர்வை
ஏன் தான் பறித்துச்சென்றாய்?

உன் வார்த்தைகளை நம்பி நானும்
வாழத்தொடங்கினேன் அவை
வாடகைப்பொருள் என்று அறியாததால்

என் நம்பிக்கையை நீ உனக்கு பலமாக்கி
நடத்திவிட்டாய் நாடகத்தை உனதாக்கி

தூரத்தில் இசைஒலி கேட்கும் போதும்
உன் துரோகத்தின் நினைவு தான் வருகிறது
இருந்தும் நீ வாழவேண்டுமென
மனம் வாழ்த்துகிறது- உன்
நினைவுகளை வலியோடு சுமந்தபடியே....(தனா)

Saturday 16 July 2011

உண்மைக்காதல்

கண்களின் சந்திப்பை காரணம் காட்டி
அதற்கு காதல் என்னும் பெயர் சூட்டி
கல்யாண மேடையில் கைகோர்ப்பதால்
உண்மைக்காதல் ஆகாது
உள்ளம் இரண்டும் இணைந்து கொண்டு
ஊடலிலும் கூடலிலும் உதிர்ந்து போகாத
உணர்வோடு உயிர் வாழ்வதே
உண்மைக்காதல்..........(தனா).

உருவமற்ற உணர்வலைகள்

என்னவனே !!!
உன் உறவென்று பெயர் சொல்லி
பிரிவென்னும் ஜெனனத்தை
ஏன் தந்தாய் எனக்குள்?
உன்னால் ஊனமான என் உள்ளத்தின்
உணர்வுகள் எல்லாம் சிலையாகும்படி
அறிவாயா என் அன்பே!
கனிவான உன் உள்ளம் ஏனோ
கல்லாகிப்போனதால் இன்று
காட்சிப் பொருளாகிவிட்டது
உனக்கும் எனக்குமான
உருவமற்ற உணர்வலைகள்....(தனா)

வெள்ளை மனது

அன்பே !!!
முள்மீது வலியோடு நீ நிற்பதை அறிந்து
நான் பூக்களை அனுப்பிவைத்தேன்
உன் பாதங்களைப் பாதுகாக்க
நீயோ பூக்களைப் புறக்கணித்துவிட்டு
பூக்கூடையின் மேல் பாதம் பதிக்கின்றாய்
அது வெற்றுக்கூடையல்ல
உனக்கான என் அன்பை சுமந்து வந்த
வெள்ளை மனது என்பதை அறியாமல்....(தனா)

உள்ளங்களின் உணர்வுக்குவியல்கள்

பிரிவுகள் நம்மைப் பிரிப்பதில்லை
நம் பிரியங்கள் நம்முள் வாழும்வரை
நிஜங்கள் ஒருபோதும் நிழலாவதில்லை
நம் நினைவுகள் நிஜமாய் உள்ளவரை
நீ பிரிந்து சென்றாலும் உந்தன்
நினைவுகள் இரைமீட்கும்
என் மீதி நாட்களை
கண்விழித்ததும் கலைந்து போக
இது கண்கள் காணும் கனவல்ல
இது நம் உள்ளங்களின்
உணர்வுக் குவியல்கள்
அவை காற்றால் மட்டுமல்ல
காலத்தாலும் கலைக்க முடியாதவை..(தனா)

உன்னை அரவணைக்கும் வானமாக நான்

நேற்றுவரை உன் நினைவை
என் மனதில் இதமாக
இடைவெளிகளின்றி பதித்துவிட்டு
இன்று வேகமாய் விலகிப்போகும்
மேகமாய் நீ இருந்தாலும்
என்றும் உன்மேல் எந்தன்
ஆழமான அன்பை வைத்து
உன்னை அரவணைக்கும்
வானமாக நான் இருப்பேன்....(தனா)

எந்தன் இதய வானின் உதயநிலா

என்னவனே ! நீ எந்தன்
எட்டாத வானத்து வெண்ணிலவா ?
என்றாவது ஒரு நாள்- உன்
எழில்முகம் காட்டி மறைவதற்கு
நீ எந்தன் இதயவானில்
தினம் தோன்றும் உதயநிலா அல்லவா?
ஒரு நாள் ஒளி காட்டி
மறுநாள் இருள் கூட்டும்
விண் நிலவாய் வேண்டாம்
என்றும் என்மனதில் மாறா அன்பு தரும்
மன்னவனாய் இருந்துவிடு.......(தனா)

அமாவாசையின் அடிமை

எட்டாத வானத்தின் எழிலரசி அவள்
ஆயிரம் தீபங்களுக்கு நடுவே
அலங்கரிக்கப்பட்ட மணப்பெண்ணாய்
கண்களுக்கு விருந்தளித்து
கவிதைகளுக்கு கருக்கொடுத்து
கவிஞர் மனதில் காதலியாகி
கருமேகங்களுடன் கைகோர்த்து
கண்ணாமூச்சி ஆடிவிட்டு
கடைசியில் கரைந்து போகிறாள்
அமாவாசையின் அடிமையாக.....(தனா)

உதறிவிடு ஒரு வார்த்தை

உறவே !!!
உனக்கான என் மனதில்
என் உணர்வுகளை கயிறாக்கி
ஊஞ்சல் ஒன்று கட்டி வைத்து
தினம் உன்னை உறங்கவைக்க
நான் காத்திருக்கிறேன் கனவோடு
இருந்தும் நீ எனக்கான உன் மனதை
உனக்குள்ளே புதைத்து வைத்து
எதற்காக போடுகிறாய் வேஷம்?
போதும் அன்பே பொல்லாத மெளனம்
உதறிவிடு ஒரு வார்த்தை என்
உதிரம் முழுவதும் உறையும் படி..(தனா)

என் யாசகங்களைப் புறக்கணித்தவன் நீ

என்னவனே !!!
உன்னிடம் நான் யாசித்ததெல்லாம்
உனக்கு சொந்தமான உன் வாழ்க்கையை அல்ல
எனக்கு சொந்தமான உன் வார்த்தைகளைத்தானே..
என் யாசகங்களைப் புறக்கனித்தவனே...
நீ சொன்ன வாசகங்களையும் மறக்கடித்துவிடு...(தனா)

என் சுவாச நாளங்களுக்குள் நீ

அன்பே !
விலகிப்போகிறேன் என்றாயே..
நீ என்ன ஒளியாகவா வந்தாய்?
நீ விலகிய பின்பும் நான்
விடியலாய் வருவதற்கு ? நீ
என் சுவாசநாளங்களுக்குள் புகுந்து
வளியாக அல்லவா வந்தாய்- பின்
எப்படி உயிர் வாழ்வேன் நீயின்றி???...(தனா)

வழித்துணையாய் நீ

அன்பே !!!
அன்று விழி மூடி
விரைவாய் நடந்தேன்
வழித்துணையாய் நீ வந்ததால்
இன்று விழி திறந்தும்
விழுந்து விழுந்து எழுகின்றேன்
நீ தந்த வலிகள் துணையாய் வருவதால்...(தனா)

உதிர்ந்துபோன உணர்வுகள்

என்னவனே !!!
உன் உதடுகளுக்கு சாயம் பூச
என் உதிரத்தை கேட்டிருந்தால்
தந்திருப்பேன் - மாறாக நீ
என் உணர்வையல்லவா
பூசிக்கொண்டாய் இன்று நீ
சொல்லும் ஒவ்வொரு பொய்யிலும்
உருத்தெரியாமல் உதிர்ந்து போவது
உன் வார்த்தைகள் இல்லை
நான் உனக்காக சேமித்து வைத்த
என் உணர்வுகள் என்பதை அறிவாயா?...(தனா)

பிரியமான பொழுதுகள்

பிரியமானவனே நாம்
பிரிந்திடக்கூடாது என
தினமும் பிரியமின்றியே
சண்டை போட்டுக்கொள்கிறோம்
நம் பிரியமான பொழுதுகள்
நம்மைப் பிரிந்துகொண்டிருப்பதை
இருவரும் அறியாமலே....(தனா)

உன் சூசகமான வாசகம்

உறவே !!!
அன்று நீ என்னிடத்தில்
அன்பே நீ மின்னலாய்
என்னுள் வந்து போகிறாய் என்றதும்
மின்மினியாய் நகைத்துக்கொண்டேன்
நான் மட்டுமல்ல என் நினைவுகளும்
உனக்குள் அப்படியே என நீ
சூசகமாக சொன்ன வாசகத்தின்
அர்த்தம் புரியாமலே...........(தனா)