&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Monday 6 June 2011

உன் வருங்காலம்

உன்னை அறியாமல்
நீ செய்த தப்புக்களுக்கு
சூழ்நிலை மேல் பழி போடலாம்
ஆனால் நீ அறிந்து செய்யும்
தப்புக்கள் அவை உன் ஆழ்மனதின்
ஆசைகளே அவைகளுக்கு
சூழ்நிலைமேல் மட்டுமல்ல
சூழ்ச்சியாளர்மேல் கூட
பழிபோட முடியாது
அவைகளுக்கான் பதிலை
நீயே தான்சொல்ல வேண்டும்
நீ பயிரிடும் தப்புக்களை
பாவங்களாக தான் அறுவடை செய்வாய்
உனக்கான வலிகளுக்கு நீயே உரமூட்டாதே
உண்மைகளை உணர்ந்துகொண்டு
உனக்கான வாழ்க்கையை வாழப்பழகு
உன் வருங்காலம் என்றும் வசந்தகாலம் தான்..(தனா)

தொலைந்து போகும் நான்

வானமான என் மனதில்
வந்து போகும் பெளர்ணமி நீ
உருண்டு திரளும் மேகமாய்
உன் நினைவு எனக்குள்

அணைத்துக்கொள்ள ஆசையில்லை
விலக்கிச் செல்ல மனமும் இல்லை
உன் நினைவை கலைத்துவிட
நினைக்கும் போதெல்லாம்
காற்றோடு கரைந்து செல்வது
காலங்கள் மட்டும் தான்

விடையில்லாக் கேள்விகள்
தினமும் என்னுள்
விண்ணைத்தொடும் அளவுக்கு

தொலைவில் உள்ளவனே
உன்னை தொலைத்துவிட
நினைத்து நானே
தொலைந்து போகிறேன் உன்னுள்...(தனா).

என் எண்ணக்கரு

மீண்டும் நாளை பேசுவோம் என
நீ சொல்லும் வார்த்தை கேட்டு
தினமும் மூழ்கடித்துக் கொள்கின்றேன்
என் இன்றைய மீதிப்பொழுதுகளை
நாளை என்பது யுகமாய் தோன்றுவதால்
இன்றைய பொழுதுகளுக்கு
இறக்கை கட்டிவிட்டு
என் பிரியம் இன்றியே என்னிடம்
நீ பெற்ற பிரியாவிடைக்கு
பிரிவைக் கொடுக்க எண்ணி
பிரிந்து கொண்டிருக்கின்றேன்
இன்றைய பொழுதுகளை
இவைகளை ஏக்கத்துடன் எழுதவில்லை
என் எண்ணக்கருவில் இருந்து
எழுதுகிறேன் எழுத்துக்காக.....(தனா).

காலாவதியாகும் என் காத்திருப்புக்கள்

காத்திருக்கச் சொன்னாய்
கால அளவைக் கூறாமலே
காத்திருக்க வைப்பது உன்
கலைகளில் ஒன்றானதால்
காத்திருப்பதுவும் என்
கடமைகளில் ஒன்றாகிவிட்டது
நான் காத்திருப்பேன் என்
அன்பும் காத்திருக்கும்
உன்னால் புறக்கணிக்கப்படும்
இந்த நிமிடங்கள் காத்திருக்குமா?
நீ சொல்லும் காரணங்கள்
காலங்களை திரும்ப தருமா?
போதும் உந்தன் பொல்லாத பரீட்சை
காலாவதியாகும் என் காத்திருப்புக்களை
உன் காரணங்களுக்காகவே சமர்ப்பிக்கிறேன்..(தனா)

நிறம்மாறும் பாசங்கள்

காரணங்கள் இன்றியே
கலைந்து சொல்லும் மேகங்களே
ஏன் இந்த வன்மம் உங்களுக்குள்
என்னவனின் எண்ணம் போலே

அந்த வானமகளின் வேதனையை
இந்த வஞ்சி மனமும் உணர்கிறதே
ஆழமான அன்பு கூட இந்த
ஆகாயத்திற்கு உறவாகி விட்டதே

நிலையில்லா மேகம் போல்
அவன் மனமும் தடையில்லாமல்
தடம் புரள்வதினால்
விடை கூட தெரியாமல் இவள்
விழி நீரில் நனைகிறதே

வேஷங்கள் தான் நிஜமென்றால்
பாசங்கள் பொய்யாவது இயல்பே
காலங்கள் கரைந்தோடலாம்
தூரங்கள் பெரிதாகலாம்
பாரங்கள் சுமையாகலாம் உன்
பாசம் மட்டும் நிறம் மாறலாமா..(தனா)

உன்னிடத்தில் நான்

உறவே !
ஒருநாள் அலங்கரிக்கும்
பூவாக இருப்பதை விட
வாழ்நாள் முழுவதும்
உன்னை பாதுகாக்கும்
முள்ளாகவே இருக்க
விரும்புகிறேன் என்றும்
உன்னிடத்தில்.......(தனா)

பிரியாமலிரு

உறவே !!!
உன்னை பிரியாமல்
பிரிந்த நாட்களில் தான்
புரிந்து கொண்டேன்
உனக்கான என் பிரியங்களை
எனக்கு உன் பிரியங்களை
புரிய வைத்த நாட்கள்
உனக்கும் என் பிரியங்களை
புரியவைத்திருக்குமா???
புரிந்தால் பிரியாமலிரு....(தனா)

உன் கேள்விக்கான தவம்

என்னவனே!!!
உன் பார்வையின் ஒளிவீச்சில்
என் இதயம் பதைபதைக்கின்றது
உச்சரிக்கும் வார்த்தைகளெல்லாம்
உருமாறி விழுவது தெரியாமல்
உதடுகள் வார்த்தைகளை உதிர்க்கின்றது
உன்னிடம் நான் கேட்க நினைத்த
கேள்விகளெல்லாம் ஏனோ
எனக்குள்ளே ஒளிந்துகொள்ள
உனக்கான என் பதில்கள் மட்டும்
உன் கேள்விக்காக தவமிருக்கின்றன..(தனா)

இமைக்க மறந்த ஈரவிழிகள்

நுனிப்புல்லின் செருக்கோடு
புயல் காற்றிற்கு கூட வளைந்திடாத
என் மனது இன்று உன் சிறு
மூச்சுக்காற்றில் நாணலாய் வளைந்து
நடைப்பிணமாய் அலைக்கழிந்து
உன் அன்புத் தூறலில் நனைந்து
உன் வெறுப்பு மழையில் குளித்து
இறுக்கிப்பிடிக்கும் என் இதயத்துடிப்பை
இரும்பின் கனமாக உணர்ந்தபடி
நாளை என்பதை உன் கையில் கொடுத்துவிட்டு
இன்று என்பதை இழந்துகொண்டிருக்கின்றேன்
இமைக்க மறந்த ஈரவிழிகளோடு.......(தனா)

நானாக வேண்டும்

நான் கடந்து சென்றுகொண்டிருந்த
என் வாழ்க்கை பயணத்தில்
எதிர்க்காற்றாய் நீ வந்தாய்
உன் ஸ்பரிசம் கண்ட நொடியே
நான் சுவாசிப்பதை மறந்துவிட்டு
யாசிக்கத் தொடங்கிவிட்டேன்
உன் வாசனைகள் மட்டுமல்ல
உந்தன் வாசகங்களும்
நானாக வேண்டும் என்று...(தனா)

வஞ்சியின் மனது

உறவே!!!
சிறு செடியாக என் அன்பு
உன்னில் படர்கையில்
புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டு
அள்ளித்தெளித்த உன் அன்பில்
அது விருட்சமாக வளர்ந்தபின்
வேரோடு வெட்டி எறிய முயல்பவனே
நீ வெட்டி எறிந்த பின்பும்
துளிர்த்துக்கொள்ள இது வாழை இல்லை
வஞ்சி மனம் என்பதை உணர்வாயா???...(தனா)