&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Sunday 8 May 2011

என்றும் உன் சேயாகவேண்டும்

..இந்த அகிலத்திற்கு என்னை
அறிமுகம் செய்தவளே
உன் அன்பிற்கு நிகரில்லை
இவ் அகிலத்தில் எதுவுமே

உன் உதிரத்தை எனக்கு
உணவாக்கினாய்
உன் உறக்கத்தை எனக்கு
துணையாக்கினாய்
உன் உழைப்பால் என்னை
உயர்வாக்கினாய்
கரையில்லா அன்பால் என்னைக்
கைதாக்கினாய்
தரையில் நான் நடக்க உன்னை
புல்லாக்கினாய்
தவமிருந்து என்னை
தாலாட்டினாய்

உன் அன்பு பாட ஓரிரு வார்த்தை
போதாதம்மா
உன் எல்லையில்லா அன்புக்கு
வாழ்த்துக்கள் கோடி சொல்வேன்
என்றும் உன் சேயாக வேண்டும் என
இறைவனிடம் வேண்டியபடியே.(தனா)

பிரிவின் வலி

நான் ஆசையுடன் நாட்டி வைத்து
நீரூற்றி சீராட்டிய பூஞ்செடிகள்
ஓர் வருட இடைவெளிக்குப் பின்பும்
என் தொடுகையின் ஸ்பரிசத்தில்
இனம் கண்டு என் தோல்களில்
தலைசாய்த்து சுகந்தம் தந்தபடியே
நலமா என கேட்டுக்கொண்டது

என் செல்லநாய்க்குட்டி
எனைக்கண்டதும் ஓடிவந்து
என் கால்களைச்சுற்றி
கரணம் போட்டபடியே
கண்ணீரை சொரிந்து கொண்டது

கொல்லைப்புற கூட்டிலுள்ள
குருவிகளெல்லாம் என் குரல் கேட்டு
குதூகலமாய் வரவேற்று
குரலெழுப்பிக்கொண்டது

இவற்றையெல்லாம் பார்த்து
இதயம் மட்டும் ஏனோ
இரும்பாக இறுகிக்கொண்டது
பிரிவின் வலி எத்தனை கொடுமையென
எனது இந்த உறவுகளின் அன்பு
எனக்கு புரியவைத்ததால்......(தனா)

உன் வெகுமதியான இரகசியங்கள்

பிரிவே !
என் அன்பிற்கும் உன் அன்பிற்கும்
உண்டான காலத்தை நீ - உன்
மனதிற்குள்ளேயே ஒப்பந்தம் செய்து
அதில் நம் இருவர் சார்பிலும்
நீயே கையொப்பமும் இட்டு
அந்த கால அளவும் கடந்த பின்
நீயே அதையும் சொன்னபோதுதான்
உன் பிரிவின் விளிம்பில் நின்றவேளை
புரிந்து கொண்டேன் உன்
இரகசியங்கள் எவ்வளவு
வெகுமதியானவை என்று....(தனா).

குயிலின் வலி

மாமரத்துக் குயிலே உன்
மனதுக்குள் என்ன வலி

நீ கூவுகிறாயா இல்லை
குழறுகிறாயா? அழுகின்ற
ஓர் இதயத்தை இன்னுமொரு
அழுகின்ற இதயம் தான்
உணர்ந்துகொள்ளும்
நானும் உணர்கிறேன்
நாளும் நீ படும் வலி

ஏன் இந்த வலி உனக்கு
என்னிடம் சொல்வாயா?
கூடிவந்த இணையா உந்தன்
குரலில் மாற்றம் தந்தது?
வாடிவிடாதே இசையே
வருங்காலம் உனக்கு வாழ்வுதரும்

கோடி ஜென்மம்போனாலும்
என்றும் குன்றாது உண்மை அன்பு
அது உன்னை நாடி வரும் நாளுக்காய்
நம்பிக்கையுடன் காத்திரு.....(தனா)

உனக்கான விடியல்

என் இனிய நட்பே !
உளிகளின் விருப்பம் போல்
கற்கள் சிலையாவதில்லை
அவை கலைஞனின் படைப்பே
அதுபோல் தான் நட்பே
மனங்களின் விருப்பம் போல்
மகிழ்ச்சிகள் வருவதில்லை
இழந்ததை நினைத்து
இருப்பதையும் இழக்காதே
காலங்கள் மாறும் போது
காட்சிகளும் மாறுவது இயல்பே
கண்ணீரை துடைத்துவிடு
கவலைகளை களைந்துவிடு
நாளை என்னும் விடியல்
உனக்காக காத்திருக்குது
நம்பிக்கையுடன் எதிர்நோக்கு
நலமாக அமையுமென.....(தனா).

காந்தமான உன் கண்கள்

என்னவனே !
உன் கண்கள் என்ன
காந்தத் துகள்களா?
இரும்பான என் மனதை
ஓர் நொடியில்
இழுத்துக்கொண்டதுவே
இயல்பாகவே...

நீ சிரிக்கும் போதெல்லாம்-என்
மனதுள் சிலிர்த்துக்கொள்கின்றன
உனக்காகவே மொட்டுவிட்ட
என் முத்தப் பூக்களெல்லாம்

உன் உதடுகள் வார்த்தைகளை
உதிர்க்கும் போதெல்லாம்
கூடவே உதிர்ந்து போவது
உன்மேல் உள்ள
என் கோப முட்களும் தான்

இப்படி என்னுள் ஏராளம்
மாற்றங்கள் தந்து என்னை
இம்சைப் படுத்துகிறது
உன் மனதில் குடியேற துடிக்கும்
உனக்கான என் இதயம்...(தனா)