&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Saturday 10 September 2011

நினைவுப்பொக்கிஷம்

என்னவனே !
நீ பிரிந்து சென்ற பின்பும்
உன் நினைவுத்துளிகள் என் மனதில்
நீங்காமல் இருக்கின்றன
நெற்றிப் பொட்டாக -உன்
குட்டிக் குறும்புகளின் ஞாபகங்கள்
நெட்டித்தள்ளுகின்றன என்
நிகழ்காலத்தை நீ தந்த
உன் நினைவுப்பொக்கிஷமாக....(தனா)

நிறம் மாறும் நேசம்

தீயின்றி நீ மூட்டும் வேள்வி
தினமும் என் மனதுக்குள்
வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் என்பர்
அங்கே முட்களும் இருப்பதாலா?

காற்றைக் கிழித்து வரும் பாணம் கூட
சிலவேளை கருணை கொண்டு
இலக்கை மாற்றும் - ஆனால்
கண்ணசைவில் வந்தகாதல் மட்டும்-மனதை
காயப்படுத்திக் களித்துக்கொள்ளும்

வாசம் கொண்ட மல்லிகை கூட
வாடிய பின்பும் நறுமணம் வீசுகையில்
தேசம் மாறிப்போன பின்பு - மனதின்
நேசம் மட்டும் நிறம் மாறுவதேனோ....(தனா)

அவன் பார்வை

பாலைவன பிரதேசமான
என் மனதில் சிறு
பன்னீர் சிதறலாய்
அவன் பார்வை - எனினும்
நான் மீண்டும் உயிர்த்துக்கொள்ள
விரும்பவில்லை -ஏனெனில்
ரோஜா எனும் முகவரியில்
மறுபடியும் முட்களிடத்தில் கைதியாக
வாழப் பிடிக்காததால்........(தனா)

நான் மாற வேண்டும்

அன்பே !
நீ கையொப்பமிடும் காகிதமாக
நான் மாறவேண்டும் - இல்லையேல்
நீ கசக்கியொறியும் கடதாசியாய்
நான் மாற வேண்டும்....

உன் பாதங்கள் விட்டுச் செல்லும் சுவடாக
நான் மாற வேண்டும் - இல்லையேல்
அவற்றை பறித்துச்செல்லும் காற்றாக
நான் மாற வேண்டும்...

உன் பார்வைகளில் மலரும் பூவாக
நான் மாற வேண்டும் - இல்லையேல்
உன் பாதத்தில் மிதிபடும் புல்லாக
நான் மாற வேண்டும்...

மொத்தத்தில் நான் மாற வேண்டும்
நீ காட்டிய நேசத்துக்கு நிகரான சேவகியாய்...(தனா)

கனவே கலையாதே

கனவே கலையாதே
நான் விழித்திருக்கும் வேளை
அவன் எனக்களித்துவிட்டுப்போன
வலிகளை மறக்க முடியாது தினமும்
மரத்துப்போகும் என் மனது
அந்த வலியிலிருந்து ஒளிந்துகொள்ள
ஓர் உறைவிடமாய் சிலமணித்துளிகளாவது
நீ வேண்டும்
கனவே கலையாதே....(தனா)

உன் பெயர்

அன்பே !
கீறல் விழுந்த கண்ணாடி என்று
என் மனதை நீ தூக்கி எறிந்துவிட்டாய்
அங்கே கிறுக்கப்பட்டிருந்தது
உன் பெயர் என்பதை அறியாமலே...(தனா)

என் மனம்

என் மனம் என்னும் வீதியில்
குறுந்தூரப் பயணியாய் நீ வந்தாய்
சேரும் இடம் வருமுன்னே மாற்றிவிட்டாய்
உந்தன் பயணப் பாதையை
ஏன் என்று கேட்டதும் ..
என் பார்வைக்கு இதம் சேர்க்க
இங்கு பசுமையில்லை என்ற உனக்கு
எங்கே தெரியப்போகிறது - நான்
உன் பாதங்களைப் பாதுகாப்பதற்காகவே
முட்களுக்கு பயந்து செடிகளை மட்டுமல்ல
பூக்களையும் புறக்கணிக்கின்றேன் என்பது...(தனா)