&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Thursday 28 April 2011

கடிவாளம் இல்லாத உன் பிடிவாதம்

என் இனிய நட்பே உன்னை
மணம் வீசும் மலராக நான் நினைக்க
நீ முள் கொண்ட ரோஜாவாகி
என் முதுகில் ஏன் குத்துகிறாய்?

உன்னை என் புன்னகை கண்டு
ஓடிவரும் உறவாகவா நான் நினைத்தேன்?
என் புதைகுழிவரை வரும்
நட்பு மலராகத்தானே நேசித்தேன்

நான் சொல்லாத சொல்லுக்கு
இலக்கணம் தேடும் நீ
என் சுவாசம் கொண்டு
நான் சொன்னவற்றை
சுலபத்தில் மறந்ததேனோ?

நான் உனைக்கேட்பதெல்லாம்
புரியாத புதிராய் இரு என்றல்ல
என்னை புரிந்து கொண்ட
நல் பூவாய் இரு என்று தானே?

இனியும் வேண்டாம் உன்
கடிவாளம் இல்லாத பிடிவாதம் அதை
கலைத்துவிடு நட்பே இல்லையேல்
அதில் கரையப் போவது நீ மட்டுமல்ல
உனை நேசிக்கும் என் உள்ளமும் தான்...(தனா)

கலைந்து செல்லும் மேகம்

கலைந்து செல்லும் மேகமே
உன் போல் தான் என் கனவுகளும்
தினமும் கலைந்து செல்கின்றன
ஏன் எதற்கு வருகிறதோ
எங்கிருந்து எங்கு செல்கிறதோ
எதுவும் புரியவில்லை எனக்கு
இருந்தும் காண்கின்றேன் இன்பமாகவே
ஏனெனில் அவைகள் என்றும்
என்னை வதைப்பதில்லை
வலிகள் தருவதில்லை
வார்த்தைகள் கொண்டு
மனதை துளைப்பதில்லை
அதற்காகவே கனவைக் காதலிக்கிறேன்
விடியல் என்பதே வேண்டாம் என
விழிக்க மறுக்கிறேன் இருந்தும்
விதிப்படியே விழித்துக்கொள்கிறேன்
மீண்டும் கனவை நோக்கிய
பயணத்துடன்............(தனா)

Monday 25 April 2011

சந்தேக முட்கள்

நீ அன்பென்னும்
மலர்ச்செண்டு கொண்டு
என் மனதை தினமும்
ஆயிரம் முறை வருடும்போதும்
நான் மெய்மறந்து சிரிக்கும்
.ஒவ்வொரு வேளையிலும்
என் மனதில் முள்கொண்டு கீறும்
ரணவலியும் கூடவே வருகிறதே
இருந்தும் சிரிக்கின்றேன் நான்
அந்த வலிகளையும் நீ வருடும் அன்பு
என்னும் மலர்ச்செண்டில் உள்ள
சந்தேகம் என்னும் முட்கள்
தருவதால் தானடா ....(தனா).

Wednesday 20 April 2011

ஊனமான என் வார்த்தைகள்

உனக்கான வார்த்தைகளை
உச்சரிக்கத் துடிக்கும் என் உதடுகள்
நீ தரும் மெளனமொழி கண்டு
ஊமையாவதை உணர்வாயா?

...நான் பேசாத வார்த்தைக்கு
நீ கூறும் அர்த்தங்களால்
நான் பேசிய வார்த்தைகள்
ஊனமாவதை தான் அறிவாயா?

சொல்லாத சொல்லுக்கு
அர்த்தங்கள் பல தேடி
சொல்லிய வார்த்தைகளை
சுமையாக்க முயலாமல்
சுரம் சேர்த்து தந்துவிடு
சுபமாக வாழ்வதற்கு....(தனா).

உன் கேள்விக்கான காத்திருப்பு

உனக்காக நான் வரையும்
ஒவ்வொரு கவிதைகளையும்
நீ ரசித்து படித்து விட்டு -இதை
யாருக்காக எழுதினாய் என
நீ கேட்கும் கேள்விக்கு
...ஒருதடவை இயங்க மறுப்பது
என் இதயம் மட்டுமல்ல
உனக்காக கவிவரைந்த
என் பேனா முனையும் தான்
இருந்தும் இவைகள் தினமும்
எதிர்பார்த்து காத்திருக்கின்றன
’’எனக்காகத்தானே’’ என நீ கேட்கும்
ஒரு கேள்விக்காக.........(தனா)

என் விழிகளில் உன் குடியேற்றம்

பனித்துளி கண்டு
பூரிப்படையும் புல்நுனி
சூரியனின் வருகைக்காக
காத்திருக்கும் தாமரை
நிலவை வரவேற்க மலர்ந்து
...மணம் வீசும் மல்லிகை
கருமேகம் கண்டு மழை
காணத் துடிக்கும் மயில்
இவை போன்று என் மனம்
உனைக் காணத்துடிக்கவில்லை
காரண்ம் நீ என்றோ என்
பார்வைகளில் உன்
விம்பங்களைத்தந்து என்
விழிகளில் குடியேறிவிட்டாய்..(தனா)

Saturday 16 April 2011

வலியில் துடிக்கும் என் மனம்

வார்த்தை என்னும் முட்கள் கொண்டு
என்னை வதைக்கும் வன்மம் ஏனடா
நேற்று முதல் உன் அன்பில் ஏனோ
மாறுதல்கள் தான் கோடிடா நான்
நேசம் வைத்த உன் மனதில்
...வேஷங்கள் தான் ஏனடா
பாசம் வைத்ததை பகடை வைத்து
நீ என்னை பாதாளத்தில் தள்ளியதால்
ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாமல்
வலியில் துடிக்கிறது என் மனமடா...(தனா)

Thursday 14 April 2011

உனக்கான என் இதயம்

என்னவனே !
உனக்காக துடிக்கும் என்
இதயத்தை ஒருமுறை
வந்து தொட்டுப்பார்
அது துடிப்பதை கூட
...மறந்து விட்டு உன்
தொடுகையின் ஸ்பரிசத்தை
இதம் சேர்க்கும்
விட்டு விட்டு துடித்த போதும்
ஒரு வினாடி கூட மறந்ததில்லை
கட்டுக்கட்டாக உன் நினைவுகளுடன்
கடக்கிறது என் நிகழ்காலம்.....(தனா)

Wednesday 13 April 2011

என்னுள் மலர்ந்த உணர்வு

என்னுள் மலர்ந்த உணர்வே
ஏன் தான் என்னை வதைக்கிறாய்
உணவு கூட மறக்கிறது
உறக்கம் எங்கோ தொலைகிறது
உறவுகள் கேலி செய்கையிலும்
உள்ளம் ஏனோ சிரிக்கிறது
விழிகள் மூடாது துடிக்கிறது
விரல்கள் வரைய மறுக்கிறது
எழுத்துக்கள் இல்லாத தாள் கூட
ஏதேதோ கருத்து சொல்கிறது
கண்ணில் காணும் பூக்கள் எல்லாம்
அசைந்து கள்ளத்தனமாய் சிரிக்கிறது
எண்ணங்கள் எங்கெங்கோ செல்கிறது
எதிலும் நிலைத்து நிற்காமல்
எனக்குள் ஏன் இந்த தடுமாற்றம்
என்றுமே இல்லாத நிகழ்வாக..(தனா)

உன் கால்தடயங்கள்

என்னவனே !
உன் கால் தடய கோலங்களின்
அழகைப் பார்த்ததும்
நான் போட்ட மாக்கோலம்
வெட்கப்பட்டு காற்றோடு
...பறந்து விட்டது ஏனெனில்
என் முற்றத்தை அலங்கரிக்க
உன் கால்தடயங்கள் போதும் என்று..(தனா)

Sunday 10 April 2011

தஞ்சமான என் நெஞ்சம்.

அறிமுகம் இன்றியே
அறிவுரை சொன்னாய்
அன்பை பெறும் முன்னே
அடிமையானேன் என்றாய்

கேட்காத கேள்விக்கு
பதிலை தந்தாய் -கேட்ட
கேள்விக்கு கேலி செய்தாய்
சின்னதாய் என்னை கோபப்படுத்தி
சிரித்து மகிழ்ந்தாய் -பின்
சீற்றம் கொண்ட வேளையில்
சினேகமாய் சிறை பிடித்துக்கொண்டாய்

மாலை மலரும் மலராக -என்
மனதுக்குள்ளே தினமும்
நீ மலர்ந்து கொண்டாய்
பூஜைக்காகவா பூத்தாய்
என நான் கேட்ட போது - ஆம்
உன்னை பூஜிக்கவே பூத்தேன் என்றாய்
இனியும் வேரென்ன வேண்டும்
அன்பே உன்னை நேசிக்க  -என்
நெஞ்சமெல்லாம் உன்னுள்
தஞ்சமான பின்பு..........(தனா)
.

நிரந்தரமான உன் நினைவு

ஓடி வரும் நதிகள் எல்லாம்
ஓர் கடலில் சங்கமிக்கும்
நீளமான பாதை கூட
ஓர் இடத்தில் நிறைவு பெறும்

என் நிழலாய் தொடரும்
உன் நினைவு மட்டும்
என்னுள் நிரந்தரமாய்
என்றும் வாழும்

வானில் விழுந்த கோடு கூட
வண்ணம் காட்டி மறைந்து போகும்
என் மனதில் விழுந்த உன்
நினைவு கோடு மட்டும் என்
மரணம்வரை நிலைத்து நிற்கும்...(தனா)
.

Saturday 9 April 2011

நிலவு சொன்ன ஆறுதல்


அந்த மாலை நேரம்
அவனைக் காணும் ஆவலில்
ஆற்றங்கரையோரம் நான்
காத்திருந்த வேளை
கள்ளமாய் வந்த அவன்
மென்மையாய் என் முதுகை வருடி
சென்று வருகிறேன் அன்பே என
சேதி சொல்லி மறைந்து போக
சொல்லக்கூட வார்த்தையின்றி
சோகமாய் நான் வழியனுப்பியதும்
மெல்லமாய் வந்த நிலவு
என் மேனியெங்கும் ஒளி வீசி
கள்ளமாய் சிரித்து கவலைப்படாதே
மீண்டும் காலையில் வருவான் உன்
கதிரவக் காதலன் என்றது..........(தனா).

Thursday 7 April 2011

திசைமாறிய பறவைகள்

சிட்டுக் குருவியாய் நாம்
சிறகடித்துப் பறந்த நாட்கள்
மொட்டுமொட்டாய் மனத்திரையில்
வட்டமிடுகின்றன இன்னமும்

பாடித்திரிந்த பசுமைவயல்
பழுதடைந்த பாடசாலை கட்டிடம்
பாக்கியம் வீட்டு நெல்லிமரம்

 
மாடிவீட்டு மாமரம்
எதிர்வீட்டு கொய்யாமரம்
பட்டம் பறிக்கும் பனைமரம்
விண்ணைத் தொட்டுவிடத்துடிக்கும்
தென்னை மரம் இவை எல்லாமே
இன்று என் கண்முன்னே ’’போரில்’’
பிரிந்து சென்ற நட்புறவுகள் மட்டும்
எங்கெங்கோ வாழ்கின்றன
திசைமாறிய பறவைகளாக....(தனா)
.

Wednesday 6 April 2011

விடியலுக்கான காத்திருப்பு

முகவரியை தராமலே உன்
முகத்தை மறைத்து சென்றவனே
விடுதலை தான் கேட்கிறாயா.. இல்லை
விடுமுறை தான் எடுக்கிறாயா?

நிஜமான உன் அன்பை நீயே
நிழலாக்கி போனாயா..இல்லை
நிலையில்லாதது உன் மனதென்று
நிச்சயம் தான் செய்தாயா?

விடையின்றி தவிக்கும் எனக்கு
விபரமாக சொல்லிவிடு இது
விதியென்று நினைத்து நானும்
விடியலுக்காக காத்திருப்பேன்...(தனா)
.

Tuesday 5 April 2011

என் காதல் மனது

 
உன் வார்த்தை ஒன்று கேட்பதற்காக
வரம் இருந்த என் மனதை
நேற்று தான் அறிந்தபோது
நிலைகுலைந்து போய்விட்டேன்
இது வேற்று மனதா என நான்
விதிர்விதிர்த்துப் போயிருந்த வேளை
காற்று வந்து கூறியது இது தான்
உன் காதல் மனது என்று......(தனா).

Monday 4 April 2011

நட்புக்கு என் நன்றிகள்

காற்றலையாக வந்து
கரம் கொடுக்கும் நட்பை

நேற்று வரை அறிந்ததில்லை
அவை நிகரில்லா உறவென்று

துன்பம் ஒன்று நேர்கையில்
தூரப்போகும் உறவுகளை விட
தேடி வந்து தோள்கொடுத்து
தேற்றிவிடும் தோழமை மேல்

தேடிவரும் சொந்தமெல்லாம்
தேவை தீர்ந்தபின் ஓடிபோக
நாடி வந்து துயர் தீர்ப்பது
நட்பு என்னும் உறவு மட்டுமே...(தனா)

நன்றியுள்ள கவிதை....

நேற்று வரை என் வரவை கண்டு
இமைக்க மறந்து ரசித்த
உன் விழிகள் இன்று
ஏன்உதாசினம் செய்கிறது

வாழ்த்துக்கூறிய உன் உதடுகள்
.வார்த்தைகளால் வதை செய்கிறது

ஏன் இந்த மனமாற்றம்
என்னை வாட்டும் எண்ணமுடன்
நீ கூறிய வார்த்தைகள்
நெருப்பின் உஷ்ணத்தை தந்தாலும்
நான் உன்னை தேடி வருவேன் என்றும் நன்றியுள்ள கவிதையாக ---தனா
 

Saturday 2 April 2011

புரியாத புதிர் நீ..

புரியாத புதிராய் என்னுள்
புதிதாய் ஒரு குழப்பம்
புதிரை விட்டவன் நீயே
புதிருக்கு விடை காண
தவிக்கிறேன் நானே
...புரியவில்லை எனக்கு
புரியும் படி சொல்லிவிடு....(தனா).

பிரம்மனின் பிரதி நீ....

பிரம்மனின் பிரதியான
உன் அழகைப் பார்த்து நான்
பிரம்மித்துப் போகின்றேன்
தினமும் பலமுறை..

சிப்பி செதுக்காத சிலையான
உனக்குள் நானே
சிறைப்படுத்திக்கொண்டேன்
என் மனதை உன் கைதியாக...

முடிந்தால் என்னை உன்
ஆயுட் கைதியாக ஏற்றுவிடு
இல்லையேல் என்னை
மரண கைதியாக தூக்கிலிடு....(தனா)

Friday 1 April 2011

என் வீட்டுக் கண்ணாடி

என் வீட்டுக் கண்ணாடி தினம்
எனைக் கேலி செய்கிறது
எனைப் பார்க்க முயலும் வேளைகளில்
உனைக் காட்டி ரசித்துக் கொண்டே
எனை மறந்து என் உதடுகள் 
 உனக்கு அளிக்கும் ஒத்தடங்களை
தினமும் எண்ணி கூறிவிட்டு
திரும்பவும் வருவாயா என கேட்கிறது...(தனா)

உன்னோடான என் பிரியம்

வீசும் தென்றல் கூட
வேறு திசை மாறி போகிறது
இதுவரை விடுமுறை கூட கேட்காத
என் இதயம் - இன்று
விடுதலைப் பத்திரம் நீட்டுகிறது..
...
நேற்றுவரை தீபமாக ஒளிர்ந்த
உன் நினைவுகள் - இன்று
தீப் பிளம்பாய் சுடுகிறது நீ
எனை விட்டு நீங்கிய காரணத்தால்....

ஏன் இந்த மாற்றம் உன் அன்பில்
எதுவுமே புரியவில்லை எனக்கு

நேற்று உன் மெளனம் கண்டு நான்
பிரிய மனமின்றி
விட்டுச் சென்ற உன் பிரியங்களை
பிரியமுடன் தான் ஏற்றாயா ? இல்லை
பிரிவை ஏற்க மறுத்தாயா?
புரியும் படி சொல்லிவிடு 
என் பிரியங்கள் என்றும் உன்னிடமே..(தனா).

புயலான பூ

அன்றைய கால பெண்ணல்ல- இவள்
வாள் போன்ற விழியின்
துணையோடு வாழ்வதற்கு.....

ஈவிரக்கமற்ற இராட்சதர்கள்
...வாழும் காலமிது இனி
இலக்கிய பெண்ணாய் வாழ்வதற்கு
இடமில்லை இவ்யுகத்தில்.....
வீறு கொண்ட பெண்ணாய்
இவள் விழித்தெழுந்து விட்டாள்.....

வயலில் களையெடுக்க இவளின்
வளைக்கரங்கள் போதுமென்றாலும்
இவள் வரும் வழியிலுள்ள
வஞ்சகர்களை களையெடுக்க
இவள் ஏந்த வேண்டும் ஆயுதம்....

தாய்மண்ணை பறிகொடுத்து
தாரத்தை பலி கொடுத்து
தன் மகவின் பசி போக்க
பூ போன்ற பெண்ணின்று
புறப்பட்டு விட்டாள்
புயலாக...........(தனா).

உன் நட்பை தந்துவிடு !


அலை போன்று வந்து என்னை
அடித்துச் சென்ற துன்பத்திலிருந்து
சிறு மிதவை போன்று வந்து
என்னைக் காப்பாற்றினாய்.... 
இருந்தும் ஏன் அசையாமல் நிற்கிறாய்?
ஒன்றில் பிரிவில்லா உன் நட்பை தந்து
என்னை கரைசேர்த்துவிடு
இல்லையேல் மறு பிறப்பில்லா
மரணத்தை தந்து - என்னை 
காலனிடம் கொடுத்துவிடு.....(தனா)

இன்பமான வலி

உறவே !
உன் அன்பும் எனக்கு ஒரு
இன்பமான வலி தான் - அது 
பிரிவை நோக்கி செல்லாதவரை...(தனா)

மலர்களே மலர்வளையமாகாதீர்

மலர்களே இனியும் தூது செல்லாதீர்
மானிடன் காதலுக்கு
பொய்மையான அவர் காதலுக்கு
சாட்சிப் பொருளாக ஏன் செல்கிறீர்?.

சூரியனின் பார்வைக்காய் மனம் ஏங்கலாம்
சுற்றியுள்ளவர் கண்களுக்கு விருந்தாகலாம்

கடவுளின் கழுத்தில் மாலையாகலாம்
கன்னியவள் கூந்தலில் சரமாகலாம்

வாழ்த்துக் கூறுபவர் கைகளில் வண்ணமாகலாம்
வண்டுகளின் உணவுக்காக தேன் கிண்ணமாகலாம்

இணைந்தவர் கைகளில் மலர்செண்டாகலாம்
- ஒருபோதும்

இறந்தவர் கால்களில் மலர் வளையமாகாதீர்.....(தனா).

என் மரணப்பாதையில் உன் மெளனம்

அன்று வார்த்தைகளை தந்து
என்னை உயிர்ப்பித்து
வாழக்கற்றுத் தந்த
உன் அதே உதடுகள் தானா
இன்று மௌனத்தை தந்து
என்னை மரணப்பாதையில்
பயணிக்க சொல்கிறது...(தனா).

ஊனமான உன் உள்ளம்

 
என் இதயத்தில் தீபமாக
ஏற்றிவைத்த உன்காதலை
தீவைத்துவிட்டுச் சென்றவனே....

திரும்ப வந்து கேட்கிறாயே
என் காதலை
அதை நீ காகிதத்திலா
எழுதிச்சென்றாய்- திருப்பி தருவதற்கு
என் கண்ணீரில் அல்லவா
எழுதிச்சென்றாய்......









என் காதல் உண்மையா என்று
என்னிடம் கேட்காதே
இன்னொருத்தியுடன்
கைகோர்த்துச் சென்ற
உன் விரல்களிடம்- கேள்
அது சொல்லும் என் காதல்....




கடைசிவரை உன் நிழலாய்
தொடர்வேன் என்று என்னிடம்
கூறிவிட்டு ...வேரொருத்தியுடன்
கடற்கரை மணலில் தடம்பதித்த
உன் கால்களிடம்-கேள்
அது சொல்லும் என் காதல்....

நான் தூங்கிய தொட்டிலில்
வேரொருத்தியை தூங்கவைத்து
தாலாட்டுப் பாடிய
உன் இதயத்திடம்- கேள்
அது சொல்லும் என்காதல்....



என் மனதில் ஈட்டியை
சொருகிவிட்டு
இன்னொருத்திக்கு
மலர் அம்பு வீசிய
உன் மனதைக்- கேள்
அது சொல்லும் என்காதல்


 
இப்படியான ஊனம் நிறைந்த
உன் உள்ளத்தில் 
உண்மையான என் காதல் -இனி
ஒருபோதும் உறங்காது...(தனா).

கல்லான என் காதல்


உன் மனஅலைகளில் மிதந்து
அல்லல் படும் அழகான பந்தாக
இருப்பதைவிட
உன் பாதங்களில் மிதிபட்டு
புதைந்து போகும் கல்லாக
இருப்பது மேல்.....(தனா)

வேண்டாம் அன்பே !!!


என்னவனே!
உன் அன்பு என்னும் நெருப்பில்
ஆயிரம் முறை குளிப்பாட்டு-ஆனால்
உன் பிரிவு என்னும் மழையில்
ஒருதடவை கூட நனைத்துவிடாதே...(தனா)

நங்கூரமான உன் நினைவு

காதலெனும் கடலில் பயணிக்கும்
- கப்பல் நான்
அலை போன்று நிலையில்லா
-உன் மனதைக்கண்டு
கரைசேர துடிக்கின்றேன் முடியவில்லை
... -ஏனெனில்
என் மனதில் நங்கூரமாய் உன்
நினைவுகள் தடுக்கின்றதே...(தனா)